29. juni 2014

காத்திருப்பு

உன் நினைவுகளின்
ஆழுகைக்குள்
என் நினைவுகள்

தண்டவாளத்தில்
பயணிப்பதுபோல்
திருப்பங்களில்லாத
பயணங்களில்

இறங்குதலும் ஏறுதலுமான
பயணங்களில்
மீண்டும் ஒரு முறை
சந்திக்க நேரலாம்

அப்பொழுதாவது சொல்லி விடு
பதில் தெரியாத
கேழ்விகளுக்குத்தான்
நீண்ட அர்த்தங்கள்

ஏதாவது சொல்லி விடு
மௌனித்து விடாதே
உன் மௌனத்துக்குப் பின்
மீண்டும் ஒரு சந்திப்புக்காக
நான் காத்திருக்க நேரலாம்

ஸ் ரீபன்


ஏவாள்

எனது அறைக் கதவுகள்
இறுக பூட்டப் படுவதில்லை
திரைச் சீலைகளிலும் கடினமில்லை
நீ வருவதும் வெளியேறுவதும்
நீ விரும்பினால் மட்டுமே
நீ காற்று

எனது புத்தகத்தின் பக்கங்கள்
திறந்தே இருக்கிறது
நீ எழுதிப் போவதற்காய்
ஆனாலும் வார்த்தைகளை
நீயே தெரிவுசெய்கிறாய்


எனது அறையின்
வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்
கறுப்பு வெள்ளை ஓவியங்களால்
அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன
வர்ணங்கள்
உன் வருதலின் பின்னரே


பெண்ணியத்தை புறக்கணித்து
ஆண் வலிமையை வாய் கிழிய கத்திவிட்டு
பாம்பும் பழமும் இல்லாமலே
தோற்றுப் போகிறேன் தினமும்
ஓரு ஆதாமாய்
நீ ஏவாள்

ஸ் ரீபன்


21. juni 2014

தனிமைக்குள்

நானும் கருத்து பெருத்த
பாறைக் கற்களும்
மேலே வானமும்
கீழே கடல் மட்டும்


நான் வாழ்ந்து விட்டேன் ஓருமுறை
என்ற எனது கத்தல்
எனக்கே திரும்பக் கேட்கிறது
பல முறையாக


சரியா தவறா எனத் தெரியாமலே
சினேகமாக சிரித்து போகிறது
காற்றும்


தனிமையாக இருக்கும்போது மட்டும்
எல்லாமே சினேகமாக
கடல்
வானம்
கறுத்த பாறைகள்
நட்சத்திரங்கள்
சினேகமாய் சிரித்துப் போகும்
காற்றும் கூட


ஆனாலும் திரும்ப வேண்டும்
நான்
நானே தயாரித்து வைத்திருக்கும்
எனக்கான வாழ்வுக்கு

ஸ் ரீபன்

புதிய கவிதை

எப்பொழுதிலிருந்து
எழுதப்படத் தொடங்கின
எனது கவிதைகள்


கொஞ்சம் உண்மையாய்
கொஞ்சம் பொய்யாய்
கொஞ்சம் யாசகமாய்
கொஞ்சம் கோபமாய்

மலரின் இதழில்
படுத்துறங்கும்
பனித் துளி போல
உன்னைப் பற்றி
எழுதுவதில் என்
கவிதைகளுக்கு
ஒரு சுகம்

புல்லின் நுனியில்
இருக்கும் பூவைக்கூட
நசுக்கிவிடாமல்
கவனமாய் கடக்கையில்
எனக்குள்ளேயே ஒரு
வெட்கம்

பதிதாய் பூத்த
மலரை
பறித்து விடாமல்
சுவாசம் முடியும் வரை
முகர்ந்து பார்த்ததில்
புதிதாய் எனக்குள்ளே
என்ன

இதை காதல் என்ற
மூன்று வரியில்
எழுதிவிடுவதில்
எனக்கு உடன்பாடு இல்லை

புதிதாக என்ன பெயர்
என் கவிதைகளையே
கேட்டதில்

இதுவரை எழுதப்படாத கவிதை என
பெயரிட்டது எனது பேனா                           ;

ஸ் ரீபன்

14. juni 2014

புலம் பெயர்ந்த உறவுகளுக்கு (முள்ளிவாய்க்காலிலிருந்து எழுதியது)
கொஞ்சம் கனவுகளோடும்
கொஞ்சம் நம்பிக்கையோடும்
மரணத்தின் வாசலில் நின்று
கடைசியாக எழுதக்கொள்வது

முப்பது வருடங்களுக்கு முன்
நாம் சேர்ந்து கலைத்துப்போட்டது
இன்றும் போட்டது போட்டபடி
ஒழுங்கற்றே கிடக்கிறது

நான் ஏழாவது தடவையாக
இடம் பெயர்ந்ததில்
அகதி என்ற பெயர்மட்டும்தான்
எனக்கென்று இருப்பது.

அன்று நாம் விதைத்தது
பெரும் பயிராகிப்போனதின்;
அறுவடை நாள் இன்று
;

வீட்டுக்கூரைகளும் பிளந்து போனதில்
குறைந்தபட்ச பாதுகாப்பாய்
பதுங்கு குழியிலிருந்து
எனக்கு எழுதத்தோன்றுகிறது

மேகம் தொலைந்த
வானத்தின் வெறுமையை
சுடுகுழல்களின் வெடியோசை
நிரப்பிவிடுகிறது புகைமூட்டங்களாய்;

சத்தமில்லாமலே
கருகிப்போய்விடுகின்றன
நாளைய விரிதலுக்கான
எங்கள் தோட்டத்து மொட்டுக்கள்

எமக்காகக் குரல் கொடுக்கவும்
கொஞ்சம் பொருள் கொடுக்கவும்
முடிகிறது உங்களால்

இப்போது கொஞ்சம் உரிமையாய்
கொஞ்சம் கோபமாய்
போரிடு என்கிறீர்கள்
நீங்கள் தந்ததிற்கு
கணக்குக் கேட்பதுபோல

கதவுகளுக்குப் பின்னால்
இடுக்குகள் வழியாகப்
பார்த்துக்கொண்டிருக்கும் என்
மகனின் நம்பிக்கை சுமந்த பயணத்தில்
நான் வெற்றிபெற்றால்

உங்கள் விடுமுறைக் காலத்தில்
எங்கள் மண்ணில் நீங்கள்
ஓய்வெடுத்துப் போகலாம்

ஸ் ரீபன்

பெண் என்னும்......


என் முதல் அழுகை
அடங்கிப் போனது
அம்மாவின்
அரவணைப்பில்


தத்தி நடந்து
வீழ்கையில்
யாரோ ஓடிவந்து
தூக்கியதில்
சுயம் தொலைந்து போனது
நான் அறியாமலே


சந்தோசமாய் குதித்தோடையில்
நீ பெண் என்ற
அம்மாவின் அதட்டலில்
முதல் அடி விழுந்தது
என் சந்தோசங்களுக்கு


என் காதலை
சொல்லப் பயந்ததில் தொடங்கி
என் வாழ்வை
யார் யாரோ முடிவெடுத்ததில்
என்னில் இருந்து விலகியது
எனது துணிவு



கணவனுடன் கட்டிலை
பகிர்ந்து கொண்டதில்
தொலைந்து போனது
எனது தனிமையும்

சிரிப்பதற்கும் அழுவதற்கும்
போடப்பட்ட வரையறைக்குள்
சிரித்து அழுது சிறையுண்டுபோனது
எனது சுதந்திரம்


இயந்திரமாய் வாழ்வின் ஓட்டத்தில்
என்னிலிருந்து எல்லாமே விலகிப்போக
கடைசியாக மீதமிருக்கும் என்னை
நானே தேடிக்கொண்டிருக்குகிறேன்


கடைசிவரைக்கும்
கிடைத்துவிடாமல் இருப்பதே மேல்
அதுவும் தொலைந்துபோகாமல்

ஸ் ரீபன்

8. juni 2014

இளவேனில்

வண்ணத்துப் பூச்சியின்
இறக்கைகள் போல
வர்ணக்கோலம் வாசலில்


கொழுத்திப் போட்டதில்
வெடித்துக் கொண்டே
இருக்கின்றன
பட்டாசுகள் நெஞ்சுக்குள்ளும்


சோவெனப் பெய்கிறது
மழை
உள்ளுக்குள்ளேயும்


ஓரு துளி பட்டதில்
ஏத்தனை மாற்றம்
காய்ந்த மரங்களிலெல்லாம்
மலர்தலுக்குத் தயாராய்
மொட்டுக்கள்


கிள்ளிப் பார்த்ததில்
நியம் என்கிறது
வலி


தோற்பதற்கு தயார்
உன்னிடம் என்றால்
அது எப்பொழுது

ஸ் ரீபன்

மௌன மொழி


தொடக் கூடிய
உயரத்தில் நின்று
கார் மேகம் ஒன்று
மழை பெய்கிறது

எனக்கும் உனக்கும்
புரியக்கூடிய பாசையில்
புறவையொன்று
ரகசியமாய் ஏதோ
சொல்லிவிடடு போகிறது

நனைந்துவிடாமல் கொஞ்சம்
கவனமாய் கடக்கையில்
களுக்கென்று சிரிக்கிறது
மழைத்தண்ணீர்

அழுகிற குழந்தையொன்று
அழுகையை நிறுத்தி
ஒரு முறை பார்த்துவிட்டு
திரும்பவும் அழுகிறது

எல்லாருக்கும் தெரிந்த
ஏதோ ஒன்று
உனக்கும் தெரியுமென்று
நானும்

ஏனக்கும் தெரியுமென்று
நீயும்

தெரிந்தே
மௌனித்து இருக்கிறோம்.

ஸ் ரீபன்


7. juni 2014


ஞாபகங்கள்

நாய் குரைத்தல்களுக்கும்
துப்பாக்கி வேட்டுக்களுக்குள்ளும்
கிடைத்த இடை வெளியில்
கடற்கரை மணலில் கால் பரப்பி
வான் பார்த்து படுத்து
நட்சத்திரங்களை ரசித்த நாட்கள்
மீண்டும் நினைவுக்கு வருகிறது

புதிதாய் சுற்றுமதில்
மஞ்சள் நிறத்தில் கட்டியதில்
மஞ்சள் வீடு என
அடையாளப் பட்டுப்போன
எனது வீடும்
எப்போதாவது காய் போடும்
கொஞ்சம் சரிந்த தென்னை மரமும்
எதிரியோ நண்பரோ
தெரு முடியும் வரை
குரைத்துக்கொண்டே போய்
திரிம்பி வரும்
கறுவல் ரைகரும்

மஞ்சள் வீட்டை மேலும்
அடையாளப் படுத்தும்
செம்பருத்தியும் முல்லைப்
பந்தலும்
என்னைக் கவிதை எழுதக்
கேட்டும்
நான் எழுதியதில்லை
ஏதும்

இடையில் கொஞ்சமாய்
ஏவாழ்களும் ஆப்பிள் மரங்களும்
ஏமாற்றமும் வலிகளுமாய்
கவிதைக் கிறுக்கல்களானதில்
மறந்தே போனது
மஞ்சள் வீடு

இப்போது மீண்டும்
மஞ்சள் வீட்டின் ஞாபகம்
நாய் குரைத்தல்களுக்குள்ளும்
துப்பாக்கி வேட்டுக்களுக்குள்ளும்
போய் வர தைரியமில்லாததில்
பஞ்சு மெத்தையில் கால்பரப்பி
வெள்ளையடிக்கப்பட்ட சுவர்களில்
நட்சத்திரங்களை தேடிக்கோண்டிருக்கிறேன்
கவிதைக்காய்

ஸ் ரீபன்