14. okt. 2014

புரிதல்

இதுவரை எழுதப்பட்டிருக்காத
கவிதையின் தலைப்பில்
தொடங்கப்பட்டிருந்தது
உனக்கும் எனக்குமான
முதல் புரிதல்

விழுந்து நொருங்கி சிதறிப்போன
ஒரு கண்ணாடித்துண்டு
என்மீதும் தெறித்து விழுந்தது
தற்செயலாக இருக்கலாம்
என்ற நம்பிக்கையில்
உன்னைப் பார்க்கையில்
உன் கண்களில்
சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியிருந்தான்

பிறிதொரு நாளில்
உன் வார்த்தைகளின் உஸ்ணம் தாளாது
மழைமேகம் கரைந்து நிலத்தில் மோதியபோது
உன் அறைக்கதவு என் முகத்தின் முன்
அறைந்து மோதி மூடிக்கொண்டது

உனக்கும் எனக்குமான பேச்சுக்கள்
தோல்வியில் முடிவடைந்தபின்
ஏதோ ஒருவித புரிந்துணர்வில்
விலகி நடக்கையில்
இன்னமும் எங்கோ ஒரு மூலையில்
என்னுள் நீ வாசம் செய்கிறாய் என்பதை
மறுதலிக்க முடியாமல் தோற்றுப்பேகிறேன்

இதுவும் ஒருவித ஆண்களின் புரிதலாக இருக்கலாம்

ஸ் ரீபன்



29. sep. 2014

மறுபடியும் ஒரு ஜனனம்

மரணம் நோக்கிய
எனது தேடல்களின் போதெல்லாம்
புதிதாய் ஓரு ஜனனம் தேவைப்படுகிறது

கடந்துவிட்ட இறந்தகாலத்தின் கதவை
மறுபடியும் திறந்து
வாழமுடியாது விட்டுப்போன வாழ்க்கையை
மறுபடியும் வாழ்ந்துபார்க்க
கிடைக்கலாம் மீண்டும் ஒரு ஜனனம்

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து
ஆவியாய் அலைவதிலெல்லாம்
இஸ்டமில்லை எனக்கு

நீண்ட தேடல்களில்
விடுபட்டுப்போனவற்றையெல்லாம்
ஒரு பட்டியலிட்டு
கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்
எல்லாம் போட்டபின்
நெருங்கலாம் என்னை மரணம்

மரணம் நோக்கிய
எனது தேடல்களின்போதெல்லாம்
புதிதாய் ஒரு ஜனனம் தேவைப்படுகிறது

ஸ் ரீபன்


27. sep. 2014

ஸ்பரிசம்

சிட்டுக்குருவியின் மீதான தொடுதல்
சாத்தியமாகவில்லை இன்றுவரை

அதன் ஒற்றைக்கண்ணுக்குள்
நீண்டு விரிந்து செல்லும் பயம்
எழுதிப்போயிருக்கிறது
கொஞ்சம் விலகியே இரு என்னும்
வார்த்தை

ஆனாலும் இப்போது
கொஞ்சம் நட்பாய்
கொஞ்சம் புரிந்துணர்வாய்
கொஞ்சம் அண்மையாய் வந்து
உணவை கொத்திப்போகிறது

எப்போதோ சில பூனைகள்
அதன் மென்மை விலக்கி
பிராண்டி எறிந்திருக்கலாம்
ஒவ்வொரு இறகுகளும் அதன் வலியை
காற்றில் பதிவுசெய்திருக்கலாம்
எந்த நட்பும் வேண்டாம் என்ற
மறுதலித்தலை அதன் பார்வை
உறுதி செய்கிறது

சிட்டுக்குருவியின்மீதான தொடுதல்
இப்போதைக்கு சாத்தியமில்லையென்றே
தோன்றுகிறது

ஸ் ரீபன்

20. sep. 2014

ஹைக்கூ கவிதை கூட்டணி

ஒரு சிறிய விளக்கு போதுமே
யாருமற்ற இரவுக்கு துணையாக

எல்லாக் கண்ணீர்த்துளிகளும்
உப்புக்கரிக்கிறது
சிலவற்றில் மட்டுமே கவலை

உன்னை நோக்கி வீசப்படும்  வார்த்தைகள்
வீரியமற்று இடையிலேயேமரணித்துவிடும் 
 அதை அலட்சியப்படுத்தினால்

கோபத்தை குறைக்க ஏதேதோ சொல்கிறார்கள்
ஒரு சிறிய புன்னகைபோதுமென்பது தெரியாமல்

புல்லாங்குழலுக்குள் காற்றுமட்டும்தான்
ராகத்தை நீதான் தேடவேண்டும்

நான் வந்துவிட்டேனென்று
 மரணத்தைவிட அழுத்தமாய்
யாரால் சொல்லமுடியும்

சிறகுதான் முழைத்துவிட்டதே
எதற்கு இந்தக் காத்திருப்பு
பறக்கலாம் வா

ஸ் ரீபன்




14. sep. 2014

இழப்பு

இரவுபெய்த மழை
ஈரமான வீதி
தாயின் கையை இறுகப்பிடித்தபடி
தெருவை வேடிக்கைபார்க்கும் சிறுமி
அவசரத்தில் எச்சமிட்டபடியே பறக்கும் பறவை
கடைசி நிமிடத்தில் கடந்துபோகும் பேருந்து
அலைபேசியின் திரையையே வெறித்தபடி மனிதர்கள்
எப்போவாவது கிடைக்கும் சன்னலோர இருக்கை
எல்லாமே தினமும் நிகழ்பவைதான் என்றாலும்
அந்த மஞ்சள் வீட்டு வராந்தாவில் தினமும்
கோப்பியும் பேப்பருமாய் இருக்கும்
வயதான பெரியவரை மட்டும்
இன்று காணவில்லை

ஸ் ரீபன்

14. aug. 2014

மாற்றங்கள் தேடி

இறந்து விடுவோம்
என்று தெரிந்தும்
மண்ணைத் தொடுகின்றன
மழைத் துளிகள்

மரணம் வரும்வரை
விளக்கை
சுற்றிக்கொண்டே இருக்கின்றன
விட்டில் பூச்சிகள்

சில நிகழ்வுகள்
இப்படித்தான்
இருக்க வேண்டும்போல
மாற்றங்கள் நிகழ
வாய்ப்பில்லாத வாழ்க்கையில்

இறந்துவிடும்
என்று தெரிந்தும்
சில ஆசைகள்
தோன்றி சில
நொடிகளிலேயே
இறந்துவிடுகின்றன

ஒரே மாதிரியாக
ஓடிக்கொண்டிருக்கும்
அருவிபோலில்லாது
தென்றலாக புயலாக
தூறலாக வெள்ளமாக

மாற்றங்களை
தேடிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை

இழப்பதற்கு
இனி ஏதுமில்லை
எனும் நிலை
வரும்போது மட்டுமே
மாற்றங்கள் வரும்போலும்


ஸ் ரீபன்


14. juli 2014

பேய் + மணிக்கூடு = 
மோதிரம்

இப்பெல்லாம் நிறைய பேய்ப்படங்கள் பார்த்து அதுபற்றிய தீவிர ஆராய்ச்சியில் இருக்கிறதால
எனது நண்பர் சொன்ன ஒரு சம்பவமும் எனக்கு நிறைய பிடிச்சுப்போயிருந்தது. அதாவதுப்பட்டது
இங்கு(நோர்வேயில்) யாரும் அனாதையாயிருந்து வயசுபோய் வயோதிபர் மடம் போனால் அவருடைய வீட்டை அரசாங்கம் எடுத்திடும். அப்படி ஒரு வீட்டுக்கு அந்த வீட்டிலை இருக்கிற பொருட்களையெல்லாம் எடுத்து எறிய எனது நண்பரை இன்னொரு நண்பர் கூட்டிப்போயிருக்கிறார். இங்கிருக்கிறதெல்லாம் எறியிற பொருட்கள்தான் ஏதாவது பிடிச்சிருந்தா எடுக்கலாம் என்று நண்பருக்கு சொல்லியிருக்கிறார்.
நண்பரும் பழைய சாமான் எனக்கெதுக்கு என்று மறுத்தாலும் ஒரு 100 வருடப் பழய ஆளுயரக்கடிகாரம் நண்பரை கவர அதையும் ஒரு தங்க மோதிரத்தையும் எடுத்திருக்கிறார். அங்கதான் ஆரம்பிச்சது பிரச்சனை. அந்த மணிக்கூடு வந்ததிலையிருந்து வீட்டிலை ஒரே சண்டை. இடைக்கிடை சண்டை வருறது சாதாரணம்தான் என்றாலும் மணிக்கூட்டுக்குப்பிறகு வீடு ஈராக் லெவலுக்கு போயிட்டுதாம். வீட்;டுக்கு வாற ஆட்களும் மணிக்கூடு நல்லாயிருக்கே எங்கை வேண்டினது எண்டு கேட்கிறதாலை அதை எறியவும் மனசில்லை. மணிக்கொருதரம் அடிக்கிற சத்தம்வேற நாரசாரமா கேட்க ஒரு மாதிரி சத்தத்ததை நிப்பாட்டினாலும் படுத்திருந்தா மணிக்கூடே கண்ணுக்குமுன்னாலை நிக்குது நித்திரையும்போச்சு. ஒரு நாள் திடீரெண்டு மணிக்கூடு ஓடுறதை நிறுத்திட்டுது அதை சரிபண்ணலாமென்டு ஒரு கதிரையில ஏறி நின்று சரிபாத்திருக்கிறார். திடீரென்டு யாரோ அடிவயித்திலை உதைஞ்சமாதிரி ஒரு வலி பத்தடி தள்ளிப்போய் விழுந்திருக்கிறார். உடனடியா எழும்பவே முடியலையாம். அம்புலன்ஸ் வந்து கொஸ்பிற்றல் போய் ஒரு வழியா திரும்ப வீட்டை வந்து நண்பரை மணிக்கூடு பற்றி விசாரிக்க அப்பதான் அவர் சொல்லியிருக்கிறார் அந்த வீட்டை இருந்தவர் செத்திட்டார் என்று. அதை முதலிலேயே சொன்னா நீ வரமாட்டாயென்டு சொல்லலையென்டு. அந்த வீட்டையிருந்தவர் ஒரு குடிகாரராம் குடிச்சே செத்திட்டாராம் இதை கேட்டதுதான் நண்பர் இந்த மணிக்கூட்டை உடனடியா கொண்டுபோய் எறிஞ்சிட்டு மோதிரத்தையும் வித்து அந்தை காசை கோயில்ல செத்தவருடைய பேருக்கு அர்ச்சனை செய்தபிறகுதான் தன்னுடைய வாழ்க்கை பழய நிலமைக்கு திரும்பியதாம். இதை நம்பலாமா? வேண்டாமா?
பேயிருக்கிறது உண்மையா?
உண்மையென்றால் உண்மை
பொய்யென்றால் பொய்
 stephen

29. juni 2014

காத்திருப்பு

உன் நினைவுகளின்
ஆழுகைக்குள்
என் நினைவுகள்

தண்டவாளத்தில்
பயணிப்பதுபோல்
திருப்பங்களில்லாத
பயணங்களில்

இறங்குதலும் ஏறுதலுமான
பயணங்களில்
மீண்டும் ஒரு முறை
சந்திக்க நேரலாம்

அப்பொழுதாவது சொல்லி விடு
பதில் தெரியாத
கேழ்விகளுக்குத்தான்
நீண்ட அர்த்தங்கள்

ஏதாவது சொல்லி விடு
மௌனித்து விடாதே
உன் மௌனத்துக்குப் பின்
மீண்டும் ஒரு சந்திப்புக்காக
நான் காத்திருக்க நேரலாம்

ஸ் ரீபன்


ஏவாள்

எனது அறைக் கதவுகள்
இறுக பூட்டப் படுவதில்லை
திரைச் சீலைகளிலும் கடினமில்லை
நீ வருவதும் வெளியேறுவதும்
நீ விரும்பினால் மட்டுமே
நீ காற்று

எனது புத்தகத்தின் பக்கங்கள்
திறந்தே இருக்கிறது
நீ எழுதிப் போவதற்காய்
ஆனாலும் வார்த்தைகளை
நீயே தெரிவுசெய்கிறாய்


எனது அறையின்
வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்
கறுப்பு வெள்ளை ஓவியங்களால்
அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன
வர்ணங்கள்
உன் வருதலின் பின்னரே


பெண்ணியத்தை புறக்கணித்து
ஆண் வலிமையை வாய் கிழிய கத்திவிட்டு
பாம்பும் பழமும் இல்லாமலே
தோற்றுப் போகிறேன் தினமும்
ஓரு ஆதாமாய்
நீ ஏவாள்

ஸ் ரீபன்


21. juni 2014

தனிமைக்குள்

நானும் கருத்து பெருத்த
பாறைக் கற்களும்
மேலே வானமும்
கீழே கடல் மட்டும்


நான் வாழ்ந்து விட்டேன் ஓருமுறை
என்ற எனது கத்தல்
எனக்கே திரும்பக் கேட்கிறது
பல முறையாக


சரியா தவறா எனத் தெரியாமலே
சினேகமாக சிரித்து போகிறது
காற்றும்


தனிமையாக இருக்கும்போது மட்டும்
எல்லாமே சினேகமாக
கடல்
வானம்
கறுத்த பாறைகள்
நட்சத்திரங்கள்
சினேகமாய் சிரித்துப் போகும்
காற்றும் கூட


ஆனாலும் திரும்ப வேண்டும்
நான்
நானே தயாரித்து வைத்திருக்கும்
எனக்கான வாழ்வுக்கு

ஸ் ரீபன்

புதிய கவிதை

எப்பொழுதிலிருந்து
எழுதப்படத் தொடங்கின
எனது கவிதைகள்


கொஞ்சம் உண்மையாய்
கொஞ்சம் பொய்யாய்
கொஞ்சம் யாசகமாய்
கொஞ்சம் கோபமாய்

மலரின் இதழில்
படுத்துறங்கும்
பனித் துளி போல
உன்னைப் பற்றி
எழுதுவதில் என்
கவிதைகளுக்கு
ஒரு சுகம்

புல்லின் நுனியில்
இருக்கும் பூவைக்கூட
நசுக்கிவிடாமல்
கவனமாய் கடக்கையில்
எனக்குள்ளேயே ஒரு
வெட்கம்

பதிதாய் பூத்த
மலரை
பறித்து விடாமல்
சுவாசம் முடியும் வரை
முகர்ந்து பார்த்ததில்
புதிதாய் எனக்குள்ளே
என்ன

இதை காதல் என்ற
மூன்று வரியில்
எழுதிவிடுவதில்
எனக்கு உடன்பாடு இல்லை

புதிதாக என்ன பெயர்
என் கவிதைகளையே
கேட்டதில்

இதுவரை எழுதப்படாத கவிதை என
பெயரிட்டது எனது பேனா                           ;

ஸ் ரீபன்

14. juni 2014

புலம் பெயர்ந்த உறவுகளுக்கு (முள்ளிவாய்க்காலிலிருந்து எழுதியது)
கொஞ்சம் கனவுகளோடும்
கொஞ்சம் நம்பிக்கையோடும்
மரணத்தின் வாசலில் நின்று
கடைசியாக எழுதக்கொள்வது

முப்பது வருடங்களுக்கு முன்
நாம் சேர்ந்து கலைத்துப்போட்டது
இன்றும் போட்டது போட்டபடி
ஒழுங்கற்றே கிடக்கிறது

நான் ஏழாவது தடவையாக
இடம் பெயர்ந்ததில்
அகதி என்ற பெயர்மட்டும்தான்
எனக்கென்று இருப்பது.

அன்று நாம் விதைத்தது
பெரும் பயிராகிப்போனதின்;
அறுவடை நாள் இன்று
;

வீட்டுக்கூரைகளும் பிளந்து போனதில்
குறைந்தபட்ச பாதுகாப்பாய்
பதுங்கு குழியிலிருந்து
எனக்கு எழுதத்தோன்றுகிறது

மேகம் தொலைந்த
வானத்தின் வெறுமையை
சுடுகுழல்களின் வெடியோசை
நிரப்பிவிடுகிறது புகைமூட்டங்களாய்;

சத்தமில்லாமலே
கருகிப்போய்விடுகின்றன
நாளைய விரிதலுக்கான
எங்கள் தோட்டத்து மொட்டுக்கள்

எமக்காகக் குரல் கொடுக்கவும்
கொஞ்சம் பொருள் கொடுக்கவும்
முடிகிறது உங்களால்

இப்போது கொஞ்சம் உரிமையாய்
கொஞ்சம் கோபமாய்
போரிடு என்கிறீர்கள்
நீங்கள் தந்ததிற்கு
கணக்குக் கேட்பதுபோல

கதவுகளுக்குப் பின்னால்
இடுக்குகள் வழியாகப்
பார்த்துக்கொண்டிருக்கும் என்
மகனின் நம்பிக்கை சுமந்த பயணத்தில்
நான் வெற்றிபெற்றால்

உங்கள் விடுமுறைக் காலத்தில்
எங்கள் மண்ணில் நீங்கள்
ஓய்வெடுத்துப் போகலாம்

ஸ் ரீபன்

பெண் என்னும்......


என் முதல் அழுகை
அடங்கிப் போனது
அம்மாவின்
அரவணைப்பில்


தத்தி நடந்து
வீழ்கையில்
யாரோ ஓடிவந்து
தூக்கியதில்
சுயம் தொலைந்து போனது
நான் அறியாமலே


சந்தோசமாய் குதித்தோடையில்
நீ பெண் என்ற
அம்மாவின் அதட்டலில்
முதல் அடி விழுந்தது
என் சந்தோசங்களுக்கு


என் காதலை
சொல்லப் பயந்ததில் தொடங்கி
என் வாழ்வை
யார் யாரோ முடிவெடுத்ததில்
என்னில் இருந்து விலகியது
எனது துணிவு



கணவனுடன் கட்டிலை
பகிர்ந்து கொண்டதில்
தொலைந்து போனது
எனது தனிமையும்

சிரிப்பதற்கும் அழுவதற்கும்
போடப்பட்ட வரையறைக்குள்
சிரித்து அழுது சிறையுண்டுபோனது
எனது சுதந்திரம்


இயந்திரமாய் வாழ்வின் ஓட்டத்தில்
என்னிலிருந்து எல்லாமே விலகிப்போக
கடைசியாக மீதமிருக்கும் என்னை
நானே தேடிக்கொண்டிருக்குகிறேன்


கடைசிவரைக்கும்
கிடைத்துவிடாமல் இருப்பதே மேல்
அதுவும் தொலைந்துபோகாமல்

ஸ் ரீபன்

8. juni 2014

இளவேனில்

வண்ணத்துப் பூச்சியின்
இறக்கைகள் போல
வர்ணக்கோலம் வாசலில்


கொழுத்திப் போட்டதில்
வெடித்துக் கொண்டே
இருக்கின்றன
பட்டாசுகள் நெஞ்சுக்குள்ளும்


சோவெனப் பெய்கிறது
மழை
உள்ளுக்குள்ளேயும்


ஓரு துளி பட்டதில்
ஏத்தனை மாற்றம்
காய்ந்த மரங்களிலெல்லாம்
மலர்தலுக்குத் தயாராய்
மொட்டுக்கள்


கிள்ளிப் பார்த்ததில்
நியம் என்கிறது
வலி


தோற்பதற்கு தயார்
உன்னிடம் என்றால்
அது எப்பொழுது

ஸ் ரீபன்

மௌன மொழி


தொடக் கூடிய
உயரத்தில் நின்று
கார் மேகம் ஒன்று
மழை பெய்கிறது

எனக்கும் உனக்கும்
புரியக்கூடிய பாசையில்
புறவையொன்று
ரகசியமாய் ஏதோ
சொல்லிவிடடு போகிறது

நனைந்துவிடாமல் கொஞ்சம்
கவனமாய் கடக்கையில்
களுக்கென்று சிரிக்கிறது
மழைத்தண்ணீர்

அழுகிற குழந்தையொன்று
அழுகையை நிறுத்தி
ஒரு முறை பார்த்துவிட்டு
திரும்பவும் அழுகிறது

எல்லாருக்கும் தெரிந்த
ஏதோ ஒன்று
உனக்கும் தெரியுமென்று
நானும்

ஏனக்கும் தெரியுமென்று
நீயும்

தெரிந்தே
மௌனித்து இருக்கிறோம்.

ஸ் ரீபன்


7. juni 2014


ஞாபகங்கள்

நாய் குரைத்தல்களுக்கும்
துப்பாக்கி வேட்டுக்களுக்குள்ளும்
கிடைத்த இடை வெளியில்
கடற்கரை மணலில் கால் பரப்பி
வான் பார்த்து படுத்து
நட்சத்திரங்களை ரசித்த நாட்கள்
மீண்டும் நினைவுக்கு வருகிறது

புதிதாய் சுற்றுமதில்
மஞ்சள் நிறத்தில் கட்டியதில்
மஞ்சள் வீடு என
அடையாளப் பட்டுப்போன
எனது வீடும்
எப்போதாவது காய் போடும்
கொஞ்சம் சரிந்த தென்னை மரமும்
எதிரியோ நண்பரோ
தெரு முடியும் வரை
குரைத்துக்கொண்டே போய்
திரிம்பி வரும்
கறுவல் ரைகரும்

மஞ்சள் வீட்டை மேலும்
அடையாளப் படுத்தும்
செம்பருத்தியும் முல்லைப்
பந்தலும்
என்னைக் கவிதை எழுதக்
கேட்டும்
நான் எழுதியதில்லை
ஏதும்

இடையில் கொஞ்சமாய்
ஏவாழ்களும் ஆப்பிள் மரங்களும்
ஏமாற்றமும் வலிகளுமாய்
கவிதைக் கிறுக்கல்களானதில்
மறந்தே போனது
மஞ்சள் வீடு

இப்போது மீண்டும்
மஞ்சள் வீட்டின் ஞாபகம்
நாய் குரைத்தல்களுக்குள்ளும்
துப்பாக்கி வேட்டுக்களுக்குள்ளும்
போய் வர தைரியமில்லாததில்
பஞ்சு மெத்தையில் கால்பரப்பி
வெள்ளையடிக்கப்பட்ட சுவர்களில்
நட்சத்திரங்களை தேடிக்கோண்டிருக்கிறேன்
கவிதைக்காய்

ஸ் ரீபன்