29. sep. 2014

மறுபடியும் ஒரு ஜனனம்

மரணம் நோக்கிய
எனது தேடல்களின் போதெல்லாம்
புதிதாய் ஓரு ஜனனம் தேவைப்படுகிறது

கடந்துவிட்ட இறந்தகாலத்தின் கதவை
மறுபடியும் திறந்து
வாழமுடியாது விட்டுப்போன வாழ்க்கையை
மறுபடியும் வாழ்ந்துபார்க்க
கிடைக்கலாம் மீண்டும் ஒரு ஜனனம்

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து
ஆவியாய் அலைவதிலெல்லாம்
இஸ்டமில்லை எனக்கு

நீண்ட தேடல்களில்
விடுபட்டுப்போனவற்றையெல்லாம்
ஒரு பட்டியலிட்டு
கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்
எல்லாம் போட்டபின்
நெருங்கலாம் என்னை மரணம்

மரணம் நோக்கிய
எனது தேடல்களின்போதெல்லாம்
புதிதாய் ஒரு ஜனனம் தேவைப்படுகிறது

ஸ் ரீபன்


27. sep. 2014

ஸ்பரிசம்

சிட்டுக்குருவியின் மீதான தொடுதல்
சாத்தியமாகவில்லை இன்றுவரை

அதன் ஒற்றைக்கண்ணுக்குள்
நீண்டு விரிந்து செல்லும் பயம்
எழுதிப்போயிருக்கிறது
கொஞ்சம் விலகியே இரு என்னும்
வார்த்தை

ஆனாலும் இப்போது
கொஞ்சம் நட்பாய்
கொஞ்சம் புரிந்துணர்வாய்
கொஞ்சம் அண்மையாய் வந்து
உணவை கொத்திப்போகிறது

எப்போதோ சில பூனைகள்
அதன் மென்மை விலக்கி
பிராண்டி எறிந்திருக்கலாம்
ஒவ்வொரு இறகுகளும் அதன் வலியை
காற்றில் பதிவுசெய்திருக்கலாம்
எந்த நட்பும் வேண்டாம் என்ற
மறுதலித்தலை அதன் பார்வை
உறுதி செய்கிறது

சிட்டுக்குருவியின்மீதான தொடுதல்
இப்போதைக்கு சாத்தியமில்லையென்றே
தோன்றுகிறது

ஸ் ரீபன்

20. sep. 2014

ஹைக்கூ கவிதை கூட்டணி

ஒரு சிறிய விளக்கு போதுமே
யாருமற்ற இரவுக்கு துணையாக

எல்லாக் கண்ணீர்த்துளிகளும்
உப்புக்கரிக்கிறது
சிலவற்றில் மட்டுமே கவலை

உன்னை நோக்கி வீசப்படும்  வார்த்தைகள்
வீரியமற்று இடையிலேயேமரணித்துவிடும் 
 அதை அலட்சியப்படுத்தினால்

கோபத்தை குறைக்க ஏதேதோ சொல்கிறார்கள்
ஒரு சிறிய புன்னகைபோதுமென்பது தெரியாமல்

புல்லாங்குழலுக்குள் காற்றுமட்டும்தான்
ராகத்தை நீதான் தேடவேண்டும்

நான் வந்துவிட்டேனென்று
 மரணத்தைவிட அழுத்தமாய்
யாரால் சொல்லமுடியும்

சிறகுதான் முழைத்துவிட்டதே
எதற்கு இந்தக் காத்திருப்பு
பறக்கலாம் வா

ஸ் ரீபன்




14. sep. 2014

இழப்பு

இரவுபெய்த மழை
ஈரமான வீதி
தாயின் கையை இறுகப்பிடித்தபடி
தெருவை வேடிக்கைபார்க்கும் சிறுமி
அவசரத்தில் எச்சமிட்டபடியே பறக்கும் பறவை
கடைசி நிமிடத்தில் கடந்துபோகும் பேருந்து
அலைபேசியின் திரையையே வெறித்தபடி மனிதர்கள்
எப்போவாவது கிடைக்கும் சன்னலோர இருக்கை
எல்லாமே தினமும் நிகழ்பவைதான் என்றாலும்
அந்த மஞ்சள் வீட்டு வராந்தாவில் தினமும்
கோப்பியும் பேப்பருமாய் இருக்கும்
வயதான பெரியவரை மட்டும்
இன்று காணவில்லை

ஸ் ரீபன்